முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் மற்றும் திட்டமிட்டவர்களை அடையாளம் காணும் முன், அக்காலத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்த ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரிடம் முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று (12.06.2026) ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், தாக்குதல் தொடர்பான உளவுத்துறைத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும், அந்தக் கொடூரச் சம்பவத்தை ஏன் தடுக்க முடியவில்லை என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
விசாரணையின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தல்.

தாக்குதலுக்குள்ளான தேவாலயங்கள் அமைந்திருந்த பகுதிகளில் பணியாற்றிய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்து விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். அதன் பின்னர், அந்த விசாரணைகளை அனைத்து நிலைகளிலும் விரிவுபடுத்தி, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் வரை விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பாதுகாப்பு அமைப்புகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய குறைபாடுகள் மற்றும் பொறுப்புத் தவறுகளை கண்டறிய இந்த அணுகுமுறை அவசியமானது என அவர் சுட்டிக்காட்டினார்.
அரசின் நடவடிக்கைகள் மீது துமிந்த அதிருப்தி.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக்காக சுயாதீன அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதாக அரசு ஆரம்பத்தில் அறிவித்ததாக துமிந்த திஸாநாயக்க நினைவூட்டினார்.
ஆனால் தற்போது, கர்தினால் ஆண்டகை மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் கோரிக்கைக்கு இணங்கவே ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டதாக அரச தரப்பு அமைச்சர் ஒருவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
தற்போதைய விசாரணை பாரபட்சமற்ற முறையில் முன்னெடுக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும், விசாரணையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.