சஜித் – ரணில் அரசியல் பேச்சுவார்த்தைக்கு புதிய நகர்வு.

UNP மறுசீரமைப்புடன் சஜித் தரப்புடனான பேச்சுகளையும் ரணில் முன்னெடுக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான தரப்புடன் நடைபெறவுள்ள அரசியல் பேச்சுவார்த்தைகளின் நேரடி பொறுப்பை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (12.06.2026) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

சஜித் தரப்புடனும் கூட்டு எதிர்க்கட்சியுடனும் முன்னெடுக்கப்பட வேண்டிய தொழில்நுட்ப ரீதியான பணிகள் மற்றும் இணைந்த நடவடிக்கைகளுக்கான பொறுப்புகளை விசேட குழுக்களுக்கு கட்சி ஒப்படைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கூட்டு எதிர்க்கட்சிகளுடனான பேச்சுகளுக்கு விசேட குழுக்கள் நியமனம்.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில், ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள், மறுசீரமைப்பு திட்டங்கள் மற்றும் கட்சியின் 80ஆவது ஆண்டு விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து ரணில் விக்ரமசிங்க விரிவாக கலந்துரையாடியதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

சஜித் பிரேமதாச தரப்புடனும் மற்ற எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து அரசியல் ரீதியாக எவ்வாறு முன்னேறுவது என்பது குறித்தும் இந்த சந்திப்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. கட்சியை கிராம மட்டத்தில் மறுசீரமைத்தல், புதிய தொகுதி அமைப்பாளர்களை நியமித்தல் மற்றும் இளைஞர் முன்னணிகளை மீண்டும் செயல்படுத்துதல் போன்ற பணிகளை விரைவுபடுத்துமாறு ரணில் அறிவுறுத்தியதாகவும் அவர் கூறினார்.

அறுவைச் சிகிச்சைக்குப் பின் மீண்டும் முழுவீச்சில் ரணில்.

அண்மையில் இதய அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட ரணில் விக்ரமசிங்க தற்போது ஆரோக்கியத்துடனும் உற்சாகத்துடனும் இருப்பதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கலந்துரையாடலின் போது “இப்போது எனது இதயம் மட்டுமல்ல, முதுகுத்தண்டும் பலமாக உள்ளது” என்று ரணில் நகைச்சுவையாக குறிப்பிட்டதாகவும் அவர் கூறினார். அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு ரணில் பத்து ஆண்டுகள் இளமையாக மாறியுள்ளதாகவும், எனவே புதிய தலைமைத்துவம் குறித்து பேச வேண்டிய அவசியம் தற்போது இல்லை என்றும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

Share This Article