தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல்சுரேஷ் சாலே தற்போது கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் சுரேஷ் சாலே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) காவலில் இருப்பதாக கூறினார். தமக்கு அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், ஆனால் அவரது மனைவியும் மகனும் அவரைச் சென்று பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.
சுரேஷ் சாலேயின் உறுதியான நிலைப்பாடு.

தமக்குத் தெரிந்த புலனாய்வுத் தகவல்களை தேவையற்ற தரப்பினருக்கு வழங்கக் கூடாது என்ற உறுதியான நிலைப்பாட்டில் சுரேஷ் சாலே இருப்பதாக சரத் வீரசேகர குறிப்பிட்டார்.
தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய தகவல்களை எந்த சூழ்நிலையிலும் வெளிப்படுத்தக் கூடாது என்ற கொள்கையை அவர் கடைப்பிடித்து வருவதாகவும் கூறினார். நாட்டின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு தகவல்களை பாதுகாப்பதில் சாலே உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சுரேஷ் சாலே உயிர் காக்க வேண்டும் என வேண்டுகோள்

“உயிர் போனாலும் தேசிய பாதுகாப்பை காட்டிக்கொடுக்க மாட்டேன்” என்ற நிலைப்பாட்டிலேயே அவர் இருப்பதாக கூறிய வீரசேகர, சாலேவை ஒரு தேசப்பற்றாளராக பாராட்டினார். அதேவேளை, அவரது உயிர் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால் உணவை உட்கொண்டு உடல்நலத்தை கவனிக்குமாறு சலேவிடமும் அவரது மனைவியிடமும் தாம் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.
மேலும், எதிர்காலத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க அவரது உயிர் பாதுகாப்பது முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.