IMF உடன் இணக்கப்பாடு – எரிசக்தி விலைகளில் புதிய தீர்மானம்.

செலவுக்கேற்ப மின்சாரம், எரிபொருள் விலை நிர்ணயம் மீண்டும் அமுல்.

மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளை மீண்டும் நிர்ணயிக்கும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சர்வதேச நாணய நிதியத்துக்கு (IMF) அறிவித்துள்ளார்.

அதிகாரப்பூர்வ கடிதத்தை ஜனாதிபதி IMF முகாமைத்துவத்துக்கு அனுப்பியுள்ளார். கடந்த 27ஆம் திகதி IMF நிறைவேற்றுச் சபை, இலங்கைக்கான விரிவான கடன் வசதித் திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளை நிறைவு செய்து அதற்கான அனுமதியை வழங்கியது. அதனைத் தொடர்ந்து இலங்கைக்கு 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி கிடைத்துள்ளது.

மே 13ஆம் திகதி அனுப்பப்பட்ட இந்தக் கடிதத்தில், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவும் கையொப்பமிட்டுள்ளனர்.

எரிசக்தி விலைகளில் புதிய தீர்மானம்.

எரிபொருள் மானியங்கள் மற்றும் பிற நிவாரண திட்டங்களுக்காக 100 பில்லியன் ரூபாவை ஒதுக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்தச் செலவுகளை செப்டெம்பர் மாத இறுதிக்குள் நிறைவு செய்யும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் திட்டத்தின் கீழ் பொருளாதார சீர்திருத்தங்களை தொடர்ந்து முன்னெடுக்க அரசு உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் பொருளாதார மாற்றத் திட்டம்.

அரசு வருவாய் அடிப்படையிலான நிதி நிலைத்தன்மையை உறுதி செய்வதுடன், வலுவான சமூக பாதுகாப்பு வலையமைப்பை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே நேரத்தில், நிதித்துறை சீர்திருத்தங்களை முன்னெடுத்து, அரச கடன் நிலைத்தன்மையை பாதுகாக்கவும், விலை நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

. அதோடு, ஊழல் அபாயங்களை குறைக்கும் வகையில் உயர்மட்ட கட்டமைப்பு சீர்திருத்தங்களை செயல்படுத்த அரசு கவனம் செலுத்தி வருகிறது.

Share This Article