வெசாக் தினத்திலும் போராட்டம் தீவிரம்.

தையிட்டியில் இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்.

யாழ்ப்பாணம் தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டும் திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் இன்று (30) வெசாக் பௌர்ணமி தினத்திலும் இரண்டாவது நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

நேற்று (29.05.2026) மாலை ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டத்தை மக்கள் இன்று காலை முதல் மாலை வரை தொடர்ந்தனர். ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்கும் முன்னைய மாலையும் பௌர்ணமி தினத்திலும் மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தனியார் காணி விவகாரத்தில் புதிய பதற்றம்.

போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், காணி உரிமையாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். போராட்டக்காரர்கள் தனியார் காணியில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் விகாரையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், தங்களின் காணி உரிமையை பாதுகாக்கும் நோக்கில் இந்த அறவழிப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதாகவும்,அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்

போராட்டப் பகுதியில் காவல்துறை குவிப்பு.

போராட்டம் இடம்பெற்ற பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். எனினும், மக்கள் அமைதியான முறையில் தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான இந்தப் போராட்டம் தற்போது 36 மாதங்களை கடந்துள்ளது. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மக்கள் இடையறாது அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share This Article