உகாண்டா மற்றும் கொங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC) இடையேயான எல்லைப் பகுதியில் எபோலா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளின் அதிகாரிகள் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளனர். எபோலா வைரஸ் உகாண்டாவிற்குள் நுழைவதைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ள நிலையில், முக்கிய எல்லைச் சாவடிகள் மூடப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
எல்லை மூடலால் போக்குவரத்து சேவைகள் பாதிப்பு.

எபோலா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உகாண்டா அதிகாரிகள் சுகாதார மற்றும் பாதுகாப்பு கண்காணிப்புகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் விளைவாக, முக்கிய எல்லைக் கடப்புப் பகுதிகளில் சரக்கு போக்குவரத்து தடைபட்டுள்ளது.
தங்களது பயணத்தைத் தொடர முடியாமல் சாரதிகளும் போக்குவரத்து நிறுவனங்களும் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றன.
வர்த்தகர்களின் வருமானத்திற்கு கடும் பின்னடைவு.

எல்லையில் தேங்கியுள்ள பல லொறிகளில் பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற விரைவில் கெடக்கூடிய உணவுப் பொருட்கள் ஏற்றப்பட்டுள்ளன. பல நாட்களாக காத்திருப்பதால் இப்பொருட்கள் லொறிகளுக்குள்ளேயே அழுகி வீணாகி வருகின்றன. இதன் காரணமாக இரு நாடுகளையும் சேர்ந்த வர்த்தகர்கள் கோடி கணக்கில் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
எபோலா பரவலைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துவரும் நிலையில், பொதுச் சுகாதார பாதுகாப்பையும் அத்தியாவசிய வர்த்தக நடவடிக்கைகளையும் சமநிலைப்படுத்தும் தீர்வுகளை விரைவாக அமல்படுத்த வேண்டும் என வர்த்தகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.