மத்திய கிழக்கு நாடான அபுதாபியில் தங்கியிருந்த 7 இலங்கை இளைஞர்களை அந்த நாட்டு அதிகாரிகள் நாடுகடத்தி இலங்கைக்கு அனுப்பியுள்ளனர். அவர்கள் நேற்று இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த குழு இரவு 9.25 மணியளவில் எயார் அரேபியா விமான சேவைக்குச் சொந்தமான 3L-708 என்ற விமானத்தின் மூலம் நாட்டை வந்தடைந்தது.
இலங்கைக்கு வெளியேற்றம்.

அபுதாபியில் தங்கியிருந்த காலத்தில், அவர்கள் மத்திய கிழக்கு பகுதியில் இடம்பெற்ற போருடன் தொடர்புடைய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தங்களது கைபேசிகளில் வைத்திருந்ததாக அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அந்த உள்ளடக்கங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததுடன், அவற்றுக்கு லைக் மற்றும் கமெண்ட் செய்துள்ளதாகவும் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதனை அடிப்படையாக கொண்டு அந்நாட்டு பாதுகாப்பு அமைப்புகள் அவர்களை கைது செய்து பின்னர் நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளன.
இலங்கையர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

நாடுகடத்தப்பட்டவர்களில் அம்பலாங்கொட, புத்தளம், பண்டாரகம, பொரளை, பொலநறுவை மற்றும் வத்தளை பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையத்தில் நடைமுறை நடவடிக்கைகள் முடிக்கப்பட்ட பின்னர், மேலதிக விசாரணைக்காக சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.
இதற்கிடையில், வெளிநாடுகளில் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் சமூக ஊடக பயன்பாடு தொடர்பாக கடுமையான சட்டங்கள் அமலில் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.