ஈரானிய மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யாத வரை, அமெரிக்காவுடன் எந்தவொரு ஒப்பந்தத்தையும் தெஹ்ரான் ஏற்காது என்று ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகரும், உயர்மட்ட பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார்.
அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB வெளியிட்ட தகவலின்படி, “எதிரிகளின் வார்த்தைகளிலும் வாக்குறுதிகளிலும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உறுதியான முடிவுகளை பெற்ற பிறகே நாங்கள் எங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்” என்று காலிபாஃப் தெரிவித்தார்
உறுதியான உத்தரவாதம் இல்லாமல் ஒப்பந்தம் இல்லை.

அமெரிக்காவின் வாய்மொழி உறுதிமொழிகள் ஈரானுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை என்று காலிபாஃப் குறிப்பிட்டார். மக்களின் உரிமைகள் மற்றும் தேசிய நலன்கள் பாதுகாக்கப்படும் என்பதில் தெளிவான உத்தரவாதம் கிடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
எந்தவொரு புதிய ஒப்பந்தத்திற்கும் முன் அமெரிக்கா செயலில் தனது நம்பகத்தன்மையை நிரூபிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஈரான் தொடர்ந்து எடுத்துக்காட்டி வருகிறது.
அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நீடிக்கின்றன.

பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தின் மூலம் ஏப்ரல் 8ஆம் தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஆனால் அதன் பின்னர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் நிரந்தர உடன்பாட்டை எட்டவில்லை.
இதையடுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்தார். அதன் பின்னர், போரை முடிவுக்குக் கொண்டு வரவும் நேரடி பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கவும் ஈரானும் அமெரிக்காவும் தொடர்ந்து முன்மொழிவுகளையும் எதிர்முன்மொழிவுகளையும் பரிமாறி வருகின்றன.