பசில் ராஜபக்ச மீது மேலும் ஒரு கைது உத்தரவு.

ஊவா தேர்தல் பிரசார நிதி மோசடி வழக்கில் புதிய திருப்பம்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மீது 2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்துடன் தொடர்புடைய பொது நிதி முறைகேடு குற்றச்சாட்டில் மேலும் ஒரு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மாத்தறை நீதவான் நீதிமன்றம் பசில் ராஜபக்சவை கைது செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, கோட்டை நீதவான் பசன் அமரசேன நேற்று (29) மேலும் ஒரு கைது உத்தரவை பிறப்பித்தார்.

7.8 மில்லியன் ரூபாய் பொது நிதி முறைகேடு குற்றச்சாட்டு.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்திற்காக, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்துக்கு சொந்தமான 7.8 மில்லியன் ரூபாய் பொது நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்களை கைது செய்ய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவர்களின் வீடுகளுக்கு சென்றனர். ஆனால் அங்கு அவர்கள் யாரையும் காணவில்லை என அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

தேர்தல் பிரசாரத்திற்கு 12,000 டி-சேர்ட்டுகள்.

அரச நிதியை பயன்படுத்தி சுமார் 12,000 டி-சேர்ட்டுகள் அச்சிடப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியது.

அந்த டி-சேர்ட்டுகளின் ஒரு பக்கத்தில் முன்னாள் ஜனாதிபதிமஹிந்த ராஜபக்சஅவர்களின் புகைப்படமும், மறுபக்கத்தில் அரசியல் கட்சியொன்றின் பெயரும் அச்சிடப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மொனராகலை மாவட்டத்தில் நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டங்கள் மற்றும் தேர்தல் பிரசார நிகழ்வுகளின்போது அந்த டி-சேர்ட்டுகள் விநியோகிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share This Article