முன்னாள் வெளிவிவகார செயலாளரும் அனுபவம் மிக்க மூத்த தூதுவருமான பிரசாத் காரியவசம், ஐக்கிய நாடுகளின் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் (CMW) தலைவராக ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ள பெலஸ் வில்சனில் கடந்த மே 28ஆம் திகதி நடைபெற்ற குறித்த குழுவின் 42ஆவது அமர்வின் தொடக்க நிகழ்வின்போது, உறுப்பினர் நாடுகளின் ஆதரவுடன் அவர் இந்த உயரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அனுபவம் கொண்ட தூதுவருக்கு புதிய பொறுப்பு.

“தற்போதைய உலக மனித உரிமை சூழலில் பல்வேறு சவால்கள் காணப்படுகின்றன. குறிப்பாக, குறைந்த வளங்களுடனும் அதிகரித்து வரும் புலம்பெயர் பிரச்சினைகளுடனும் நாம் செயல்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே, புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக குழு எதிர்காலத்தில் அதிக மூலோபாய அணுகுமுறையுடன் செயற்பட வேண்டும்” என பிரசாத் காரியவசம் தெரிவித்தார்.
2004ஆம் ஆண்டு இந்த குழு ஆரம்பிக்கப்பட்ட போது அதன் முதலாவது தலைவராகவும் காரியவசமே பணியாற்றினார். அதனால், இந்த புதிய நியமனம் அவரது நீண்டகால சர்வதேச அனுபவத்திற்கும் மனித உரிமை துறையில் அவர் வழங்கிய பங்களிப்பிற்கும் கிடைத்த முக்கிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
புலம்பெயர் தொழிலாளர் நலனில் புதிய எதிர்பார்ப்புகள் உருவாகும்.

பிரசாத் காரியவசம் இதுவரை நான்கு தடவைகள் CMW குழுவில் பணியாற்றியுள்ளார்.2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் காரியவசம் CMW குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அவர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு குழுவின் தலைவராக பணியாற்ற உள்ளார்
அரசாங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்ட அவர், உலகளாவிய புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்காக ஒரு தசாப்தத்திற்கும் மேலாக செயற்பட்டு வருகிறார்.