யாழ்ப்பாணத்தில் பகல் நேர கொள்ளை: 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது.

வல்வெட்டித்துறை கொள்ளை வழக்கில் 74 லட்சம் மீட்பு.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கொம்மாந்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இரு பிரதான சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த மே 27ஆம் திகதி பகல் வேளையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்திய இருவர், வீட்டின் புகைக்கூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பெருமளவு பணத்தை கொள்ளையிட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காணொளி அழைப்பில் அறிவுரை.

அருகிலுள்ள பகுதிகளின் கண்காணிப்பு கமரா காட்சிகளை ஆய்வு செய்த அதிகாரிகள் சந்தேகநபர்களை அடையாளம் கண்டனர். கெருடாவிலைச் சேர்ந்த 16 வயது சிறுவனையும் 19 வயது இளைஞனையும் பொலிஸார் தனித்தனி இடங்களில் வைத்து கைது செய்தனர்.

ஒருவரை வல்லைச் சந்தியிலும் மற்றையவரை யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியிலும் கைது செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

74 லட்சம் ரூபாய் பணத்தை மீட்ட பொலிஸார்.

விசாரணைகளின் போது, வீட்டிற்குள் நுழைந்த பின்னர் அங்கு அதிகளவு பணம் இருப்பதை சந்தேகநபர்கள் நெடுங்கேணியைச் சேர்ந்த ஒருவருக்கு காணொளி அழைப்பின் மூலம் தெரிவித்ததாக பொலிஸார் கூறினர்.

அதன் பின்னர் கொள்ளையிடப்பட்ட பணத்தை நெடுங்கேணிக்கு கொண்டு சென்று அங்குள்ள காணியொன்றில் புதைத்து வைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பணத்தை மறைத்து விட்டு யாழ்ப்பாணம் திரும்பியபோதே இரு சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்தனர்.

Share This Article