சீனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவர் பை இன்ஸான் தலைமையிலான பிரதிநிதிகள் குழு இன்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தது. ஜனாதிபதியின் நேரடியான மற்றும் தொலைநோக்குடைய தலைமைத்துவம் காரணமாக இலங்கையில் முதலீடு செய்வதற்கான நம்பிக்கை மேலும் வலுப்பெற்றுள்ளதாக பை இன்ஸான் தெரிவித்தார்.
கொழும்பு துறைமுக நகருக்கு பாராட்டு.

கொழும்பு துறைமுக நகர் சிறப்பு பொருளாதார வலயத்திற்கு அரசாங்கம் வழங்கியுள்ள ஊக்குவிப்புகளுக்கு நன்றியைத் தெரிவித்த சீனா ஹார்பர் தலைவர், ஜனாதிபதியின் தலைமையில் இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையை அடைந்திருப்பதையும் பாராட்டினார். இந்த முன்னேற்றம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு முதலீடுகள் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய தூண் என ஜனாதிபதி வலியுறுத்தல்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நேரடி வெளிநாட்டு முதலீடுகள் இன்றியமையாதவை என வலியுறுத்திய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, முதலீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என தெரிவித்தார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்பட்ட இணக்கப்பாடுகள் மூலம் கொள்கை ரீதியான ஸ்திரத்தன்மை உருவாகியுள்ளதாகவும், கொழும்பு துறைமுக நகரை அபிவிருத்தியடைந்த பொருளாதார மையமாக மாற்றுவதே அரசாங்கத்தின் இலக்காக இருப்பதாகவும் கூறினார். அதேவேளை, டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய சீனா ஹார்பர் நிறுவனத்திற்கும் ஜனாதிபதி நன்றியைத் தெரிவித்தார்.