முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கருத்தால் புதிய சர்ச்சை

ஜீவந்த பீரிஸ் கருத்திலிருந்து விலகிய திருச்சபை

கடந்த மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில், இறுதி யுத்தத்தின் போது இனப்படுகொலை இடம்பெற்றதாக அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் கருத்து வெளியிட்டார். அவரது இந்தக் கருத்து நாட்டின் அரசியல் மற்றும் மத வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையும் இலங்கை கத்தோலிக்க திருச்சபையும் அந்தக் கருத்துக்களை வன்மையாக நிராகரிப்பதாக கத்தோலிக்க தேசிய ஊடக மையத்தின் இயக்குநர் தெரிவித்தார்.

கத்தோலிக்க திருச்சபை விளக்கம்.

அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தெரிவித்த கருத்து அவரது தனிப்பட்ட நிலைப்பாடு மட்டுமே என்றும் அது ஒட்டுமொத்த கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரப்பூர்வ கருத்தாக கருதப்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், சர்ச்சைக்குரிய மற்றும் உணர்வுபூர்வமான தேசிய விடயங்களில் திருச்சபை மிகவும் பொறுப்புடன் செயற்படுகின்றது என்றும், அதிகாரப்பூர்வ அனுமதி இல்லாத கருத்துக்களை திருச்சபையின் நிலைப்பாடாக மக்கள் புரிந்துகொள்ள வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2009ஆம் ஆண்டு வத்திக்கானுக்கு அனுப்பப்பட்ட கடிதம் குறித்து மீண்டும் கவனம்.

இதேவேளை, 2009ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதி முள்ளிவாய்க்காலிலிருந்து வத்திக்கானுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இறுதி யுத்த நாட்களில் அனுப்பப்பட்டதாக கூறப்படும் அந்தக் கடிதத்தின் உள்ளடக்கம் தொடர்பிலும் தற்போது மீண்டும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் வெளியான கருத்துகளுக்குப் பின்னர், இந்த விடயம் மீண்டும் பொதுமக்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

யுத்தத்தின் இறுதி கட்டம், பொறுப்புக்கூறல், மற்றும் அக்காலத்தில் மதத் தலைவர்களின் பங்கு உள்ளிட்ட பல அம்சங்கள் தொடர்பாக பல தரப்பினர் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.

Share This Article