கடந்த நான்கு மாதங்களில் இலங்கை எரிபொருள் இறக்குமதிக்காக சுமார் ஒரு பில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளதாக சமீபத்திய பொருளாதார தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக சந்தையில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் மற்றும் நாட்டின் அதிகரித்துள்ள இறக்குமதி தேவைகள் காரணமாக இந்த செலவினம் மேலும் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 2025ஆம் ஆண்டு முழுவதற்குமான எரிபொருள் இறக்குமதி செலவு 1.5 பில்லியன் ரூபாயை எட்டும் என பொருளாதார நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இந்த நிலைமை நாட்டின் வெளிநாட்டு நாணய கையிருப்பிலும் பொருளாதார நிலைத்தன்மையிலும் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு, எதிர்காலத்தில் அரசாங்கத்தின் நிதி மேலாண்மைக்கும் பெரும் சவாலாக மாறக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
வெளிநாட்டு நிதியில்தான் இலங்கையின் எதிர்காலமா?

இதேவேளை இலங்கை தற்போது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) வரும் ஜூன் மாதத்தில் 700 மில்லியன் டொலர்களை எதிர்பார்க்கிறது. அதனுடன் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து (ADB) மேலும் 250 மில்லியன் டொலர்கள் கிடைக்கும் என அரசாங்கம் நம்புகிறது.
இந்த நிதி உதவிகளே நாட்டின் குறுகியகால பொருளாதாரத்தை தாங்கி நிறுத்தும் முக்கிய ஆதாரமாக உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வெளிநாட்டு உதவிகள் தொடரவில்லை என்றால், எரிபொருள் கொள்முதல், கடன் செலுத்துதல் மற்றும் அரச செலவுகளை நிர்வகிப்பதில் இலங்கை பெரும் சிரமங்களை சந்திக்க நேரிடும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தேயிலை ஏற்றுமதி வீழ்ச்சி: அரசாங்கத்திற்கு புதிய தலைவலி.

எதிர்வரும் நாட்களில் டீசல் விலை 720 ரூபாயாக உயரக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அது மக்களின் வாழ்க்கைச் செலவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, UAE-க்கு இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 93 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் செப்டெம்பர் மாதத்தில் இலங்கை மற்றொரு அதிர்ச்சியை எதிர்கொள்ளும் சூழ்நிலை உருவாகலாம் என்றும் அருஸ் குறிப்பிட்டுள்ளார். லங்காசிறியின் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இந்த கருத்துகளை வெளியிட்டார்.