சுவிட்சர்லாந்தில் மக்கள்தொகை கட்டுப்பாட்டு திட்டம் பரபரப்பு.

சுவிட்சர்லாந்தின் எதிர்கால குடியேற்றக் கொள்கையை தீர்மானிக்கும் வாக்கெடுப்பு.

சுவிட்சர்லாந்தில் குடியேற்றத்திற்கு எதிராக நீண்ட காலமாக கருத்து வெளியிட்டு வரும் சுவிஸ் மக்கள் கட்சி, “No to 10 Million Switzerland” எனப்படும் புதிய மக்கள் முன்மொழிவை அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டின் மக்கள்தொகை 10 மில்லியனை மீறாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

வெளிநாடுகளில் இருந்து குடியேறும் மக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி, நாட்டின் மக்கள்தொகை வேகமாக அதிகரிப்பதை தடுக்கும் முயற்சியாக இந்த பிரேரணையை கட்சி முன்வைத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான மக்கள் வாக்கெடுப்பை எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி நடத்த சுவிட்சர்லாந்து நிர்வாகம் தீர்மானம் எடுத்துள்ளது.

ஜூன் 14 வாக்கெடுப்பில் பங்கேற்குமாறு அழைப்பு.

சுவிட்சர்லாந்திலுள்ள சோசலிச ஜனநாயக கட்சியின் உறுப்பினர் சிறி. இராசமாணிக்கம், குடியுரிமை பெற்றுள்ள அனைத்து மக்களும் கட்டாயம் வாக்களிப்பில் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தவறான கருத்துகளால் குழப்பமடையாமல், பிரேரணையை தெளிவாக வாசித்து புரிந்துகொண்டு வாக்களிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

சுவிஸ் அரசாங்கமும் கட்சிகளும் எதிர்ப்பு.

சுவிஸ் மக்கள் கட்சியைத் தவிர நாட்டிலுள்ள அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் இந்த பிரேரணையை நிராகரித்துள்ளன. சுவிட்சர்லாந்து அரசாங்கமும் இந்த யோசனைக்கு எதிராக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த வாக்கெடுப்பு, சுவிட்சர்லாந்தின் எதிர்கால குடியேற்றக் கொள்கைகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அரசியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

Share This Article