வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி பொது மன்னிப்பு அறிவித்துள்ளார். அரசியலமைப்பின் 34ஆவது பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வெசாக் பண்டிகை எடுத்துரைக்கும் கருணை, சமாதானம் மற்றும் மனிதநேயப் பண்புகளை மதித்து அரசு இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. ஆண்டுதோறும் வெசாக் தினத்தை ஒட்டி தகுதி பெற்ற சில கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கும் மரபும் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.
அரசின் மனிதநேய நடவடிக்கை.

இதன்படி, நாடு முழுவதும் உள்ள சிறைகளில் தண்டனை அனுபவித்து வந்த 61 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை திணைக்கள ஊடகப்பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க வழங்கிய தகவலின்படி, இவர்களில் 33 கைதிகள் இன்று (30) வெசாக் தினத்தை முன்னிட்டு உத்தியோகபூர்வமாக விடுதலை செய்யப்படுகின்றனர்.
விடுதலை பெறும் கைதிகள் சட்டரீதியான நடைமுறைகளை பூர்த்தி செய்த பின்னர் தங்கள் குடும்பங்களுடன் இணைவார்கள் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.