எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க ரணில் புதிய முயற்சி.

விமல் வீரவங்சவை சந்தித்த ரணில் விக்கிரமசிங்க.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச ஆகியோருக்கு இடையில் அண்மையில் முக்கிய அரசியல் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது

போர் வீரர்கள் நினைவுத் தூபி அருகே ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட விமல் வீரவங்ச பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க தொலைபேசி மூலம் விமலுடன் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்ததுடன், ஓய்வான நேரத்தில் தன்னைச் சந்திக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

நீண்ட நேர பேச்சுவார்த்தையில் பேசப்பட்ட முக்கிய விடயங்கள்.

அந்த அழைப்பைத் தொடர்ந்து, விமல் வீரவங்ச கொழும்பு கொள்ளுப்பிட்டி ஐந்தாம் ஒழுங்கையில் அமைந்துள்ள ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்துக்கு சென்றுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, நாட்டில் வலுவான கூட்டு எதிர்க்கட்சியை உருவாக்க வேண்டிய அவசியத்தை ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், அந்த முயற்சியில் விமல் வீரவங்ச முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு விமலும் சாதகமான பதிலை வழங்கியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூட்டு எதிர்க்கட்சியை உருவாக்கும் புதிய திட்டம்.

ஐக்கிய மக்கள் சக்தியைத் தவிர்ந்த எதிர்க்கட்சிகளின் பல கட்சிகளை ஒன்றிணைத்து புதிய கூட்டணியை அமைக்கும் முயற்சிகள் விரைவில் ஆரம்பமாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்த சில வாரங்களில் தீவிரமடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட காலமாக அரசியலில் எதிர்த்தரப்புகளில் செயல்பட்ட ரணிலும் விமலும் தற்போது ஒரே அணியில் இணைந்து செயல்படக்கூடும் என்ற தகவல் அரசியல் அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Share This Article