ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: நீதிமன்றில் அதிர்ச்சி தகவல்கள்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் நீதிமன்றத்தில் புதிய குற்றச்சாட்டுகள் வெளியீடு

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைகளின் போது கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் புதிய தகவல்கள் வெளியாகின. சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் முன்னால் அரச புலனாய்வுச் சேவை தலைவர் சுரேஷ் சாலே தாக்குதல் நடந்த நாளில் அசாத் மௌலானா என்பவரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் மூலம் கூடுதல் சாட்சியங்களும் வெளியாகியுள்ளன.

தாக்குதல் தின தொலைபேசி அழைப்பு குறித்து புதிய வெளிப்பாடு

அசாத் மௌலானா வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், காலிமுகத்திடலில் அமைந்துள்ள தாஜ் சமுத்ராஹோட்டலுக்கு அருகிலிருந்த கடற்கரைப் பகுதியில் தங்கியிருந்த ஒருவருக்கு உதவி வழங்குமாறு அந்த தொலைபேசி அழைப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாக திலீப பீரிஸ் தெரிவித்தார். மேலும், அந்த நபரின் கைபேசியை பெற்றுக்கொண்டு அவரை அங்கிருந்து வேறு இடத்துக்கு அழைத்துச் செல்லுமாறும் கேட்டதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

எனினும், அந்த நேரத்தில் தான் மட்டக்களப்பில் இருப்பதாக அசாத் மௌலானா தெரிவித்ததைத் தொடர்ந்து, சுரேஷ் சாலே உடனடியாக அழைப்பை நிறுத்தியதாகவும் நீதிமன்றத்தில் தகவல் முன்வைக்கப்பட்டது

அப்துல் லத்தீப் ஜமீல் தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியானது

நீதிமன்ற விசாரணையின் போது, தொலைபேசி உரையாடலில் குறிப்பிடப்பட்ட நபர் அப்துல் லத்தீப் ஜமீல் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் உறுதிப்படுத்தினார். பின்னர், தெஹிவளையில் அமைந்துள்ள ட்ரொபிகல் இன் விடுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்துடன் ஜமீலுக்கு தொடர்பு இருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்தது. அந்த குண்டுவெடிப்பில் அவர் உயிரிழந்தார்

இதற்கிடையில், அக்காலத்தில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக செயல்பட்ட தற்போதைய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர ,அப்துல் லத்தீப் ஜமீல் பயங்கரவாதியாக அடையாளம் காணப்படவில்லை என குறிப்பிட்ட அறிக்கைகளை தாக்கல் செய்திருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது

மேலும், முன்னாள் அரச புலனாய்வுச் சேவை தலைவர் நிலந்த ஜயவர்தன அப்துல் லத்தீப் ஜமீல் தொடர்பான விரிவான தகவல்களை உள்ளடக்கிய கடிதமொன்றை 2017 நவம்பர் 8 ஆம் தேதி முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அவர்களுக்கு அனுப்பியிருந்ததாகவும் நீதிமன்றத்தில் தகவல் வெளியிடப்பட்டது.

Share This Article